Friday, September 11, 2009

நேர்மைக்கு கிடைத்த பரிசு

இவன் ஒரு நேர்மையான பிச்சைக்காரன். ஒரு நாள் இவன் ஆடம்பரமான குடியிருப்பு ஒன்றின் கதவை தட்டினான், வீட்டு சமையல்காரன் வெளியே வந்து “உனக்கு என்னவேண்டும் எனது அருமையான மனிதனே?” என்றான்.

“கடவுளின் அன்பிற்காக நீங்கள் ஒரு சிறிய கொடை புரியவேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.

“இரு இதனை நான் எஜமானி அம்மாவிடம் தெரிவிக்கிறேன்” -என்றான் அந்த சமையற்காரன்.

சமையற்காரன் வீட்டு எஜமானியிடம் இந்த விஷயத்தை தெரிவித்தான். அவள் கூறினாள்- ” ஜெரிமையா, அந்த நல்ல மனிதனுக்கு, ஒரு ரொட்டித் துண்டம் கொடு, முடிந்தால் நேற்றைய ரொட்டித் துண்டாயிருந்தால் நல்லது” என்றாள். அவள் ஒரு கஞ்சப்பிசினாரி.

தனது எஜமானியம்மாவுடன் ரகசிய காதல் புரிந்து வரும் சமையற்கார ஜெரிமையா, பாறை போல இறுகிப் போன ஒரு ரொட்டித் துண்டத்தை பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்”- பிச்சைக்காரன் வாழ்த்தினான்.

சமையற்காரன் அந்த வீட்டின் மிகப்பெரிய கருவாலி மரக் கதவை சாத்தினான். பிச்சைக்காரனும் கைகளில் ஏந்திய ரொட்டித் துண்டுடன், தான் பகல்களையும், இரவுகளையும் கழிக்கும் காலியிடத்திற்கு வந்து, ரொட்டியை சாப்பிட ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். ஒரு கடினமான பொருளை கடித்த அவன் தனது பற்களில் ஒன்று உடைந்து சிதறியதை உணர்ந்தான்.

உடைந்த அந்த பல்லின் சிதறல்களிலிருந்து தங்கம், முத்துக்கள், வைரங்கள் பதித்த ஒரு மோதிரம் இருந்ததைக் கண்டு அதிசயித்தான்.

என்ன அதிர்ஷ்டம்! அவன் தனக்கு தானே கூறிக் கொண்டான், நான் இதனை விற்று நீண்ட நாட்களுக்கு தேவையான பணத்தை அடைவேன் என்று முணுமுணுத்தான்.

ஆனால் அவனது நேர்மை உடனடியாக வந்தது. “இல்லை”, இதனை உரியவரிடம் சேர்ப்பதுதான் முறை என்று கூறிக் கொண்டான்.

மோதிரத்தில் ஜே. எக்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. புத்தியற்றவன் என்று கூறுவதற்கும் இடம் இல்லாமல், சோம்பேரியாகவும் இராமல், பிச்சைக்காரன் ஒரு கடைக்குச் சென்று தொலைபேசி புத்தகத்தை வாங்கினான். அந்த ஊர் முழுவதும் உள்ள பெயர்களில் ஒரே ஒரு குடும்பத்தின் பெயர்தான் எக்ஸ் என்ற எழுத்தில் துவங்கியிருந்தது. ஸொஃபானியா குடும்பம்”.

தன்னுடைய நேர்மையை செயல்படுத்த முடிவதை நினைத்து குதூகலம் அடைந்த அவன், சொஃபானியா குடும்பம் வசிக்கும் வீட்டை நோக்கி நடையை கட்டினான். அது தனக்கு மோதிரம் உள்ள ரொட்டி கொடுத்த அந்த வீடுதான் இது என்றவுடன் மேலும் மகிழ்ச்சியடைந்தான். கதவைத் தட்டினான்.

ஜெரிமையா வந்து உனக்கு வேண்டும் மனிதனே? என்றான்.

“நீங்கள் சற்று முன் பெரிய மனது பண்ணி எனக்கு கொடுத்த ரொட்டியில் இந்த மோதிரம் இருந்தது” என்றான்.

இதனை நான் எஜமானியம்மாவிடம் காண்பித்து விட்டு வருகிறேன் என்று ஜெரிமையா மோதிரத்துடன் உள்ளே சென்றான்.

எஜமானியம்மாள் மோதிரத்தை கண்டவுடன் ” என்ன அதிர்ஷ்டம், கடந்த வாரம் நான் ரொட்டிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த போது தொலைந்த மோதிரம்”. ஜே.எக்ஸ் எனது இனிஷியல்தான். ஜோசர்மினா சொஃபானியா என்ற எனது பெயரின் இனிஷியல்தான் அது” என்றாள்.

சிறிது யோசித்த அவள் “ஜெரிமையா அந்த நல்ல மனிதனுக்கு, அதிக விலையில்லாத அளவில், வேண்டியவற்றை கொடு” என்றாள்.

பிச்சைக்காரனிடம் வந்த ஜெரிமையா, “உன்னுடைய இந்த நற்செயலுக்கு அன்பளிப்பாக நீ விரும்பியதைக் கேள்” என்றான்.

“என்னுடைய பசியைப் போக்கும் ஒரு ரொட்டித் துண்டம் போதும்” என்றான் பிச்சைக்காரன்.

தன்னுடைய எஜமானியம்மாவை இன்னமும் காதலித்து வந்த அவன் அவளை திரு‌ப்தி செய்வதற்காக, மீண்டும் பாறை போன்று இறுகிய ஒரு ரொட்டித் துண்டத்தை கொண்டு வந்து பிச்சைக்காரனிடம் அளித்தான்.

“கடவுள் உங்களை ஆசிவதிப்பார்”.

ஜெரிமையா அந்த கருவாலி மரக் கதவை அறைந்து சாத்தி விட்டுச் சென்றான். பிச்சைக்காரன் தனது கைகளில் உள்ள ரொட்டியுடன் தனது காலி இடத்திற்கு வந்து சேர்ந்தான். ஒரு மர நிழலில் அமர்ந்து ரொட்டியை சாப்பிடத் துவங்கினான், உடனேயே கடினமான பொருளை கடித்த அவனது மற்றொரு பல் உடைந்து சுக்கு நூறாகியதை உணர்ந்தான், அதே போல் உடைந்த பற் சிதறலில் மீண்டும் ஒரு தங்கம், வைரம் மற்றும் முத்துக்கள் பதித்த மோதிரம் இருந்தது.

இம்முறையும் ஜே.எக்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கபட்டிருந்ததை பார்த்தான். திரும்பவும் மோதிரத்தை ஜோசர்மினா சொஃபானியாவிடம் திருப்பிக் கொடுத்தான், வெகுமதியாக கடினமான பாறை போன்ற 3ஆவது ரொட்டித் துண்டத்தைப் பெற்றான். இதிலும் ஒரு மோதிரத்தைக் கண்டான், திரும்பவும் உரியவரிடம் கொண்டு சேர்த்தான், வெகுமதியாக கடினமான பாறை போன்ற ரொட்டித் துண்டு கிடைத்தது, அதில்…

அந்த அதிர்ஷ்டகரமான நாளிலிருந்து, அவனது மரணத்தின் துரதிர்ஷ்டமான நாள் வரை அந்த பிச்சைக் காரன் காசுப்பிரச்சனைகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அதாவது அவன் ஒவ்வொரு நாளும் ரொட்டியில் இருக்கும் மோதிரத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் அவ்வளவே.

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List