Monday, September 14, 2009

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

பல தாய்மார்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றே தெரியவில்லை. அவர்களுக்காகவே தாய்ப்பால் கொடுப்பது மற்றும் குழந்தைகளின் நலன் குறித்த மையத்தை ஆரம்பித்திருக்கிறோம்’’ என்கிறார்கள் டாக்டர் பத்மினியும், டாக்டர் சுப்பிரமணியமும்.

‘‘நம் முன்னோர்கள் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக் கொண்டதாக நாம் கேள்விப்பட்டதே கிடையாது. வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு அவர்கள் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுத்ததில்லை.

ஆனால், இப்போது குறைமாத பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம், எடை குறைந்த குழந்தைகள் பிறப்பது சகஜமாகி வருகிறது. இதுதவிர, பிறந்த குழந்தையை எப்படித் தூக்க வேண்டும் என்று கூட இப்போது பல தாய்மார்களுக்கு தெரிவதில்லை. பிரசவத்துக்குப் பின் தாயிடம் சுரக்கும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்தப் பாலை சீம்பால் என்பார்கள். இதை குழந்தைக்கு கொடுக்க பலர் தயங்குகின்றனர். அது தவறு. காரணம், குழந்தையின் செரிமான சக்தியை வளர வைக்க இந்தப் பாலே உதவுகிறது’’ என்று சொன்ன டாக்டர் சுப்பிரமணியத்தை, தொடர்ந்தார் டாக்டர் பத்மினி.

‘‘பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் கிடைக்கும் தாயின் ஸ்பரிசம், அவர்கள் இருவருக்கிடையே நெருக்கமான ஒரு பந்தத்தை உருவாக்குகிறது. தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை சரியான நிலையில் பிடிப்பதும் அவசியம். மடியில் தலையணையை வைத்துக் கொண்டு, குழந்தையை கையில் ஏந்த வேண்டும்.

குழந்தையின் வயிறும், தாயின் வயிறும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும் படி குழந்தையை படுக்க வைக்க வேண்டும். அதாவது குழந்தை ஒரு கையில் படுத்துக் கொண்டு தாய்ப்பாலை பருகும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு கழுத்து வலியும், தாய்க்கு மார்பக காம்பிலும் பிரச்னைகள் ஏற்படாது. சரியான நிலையில் குழந்தையை கிடத்தாமல், குழந்தை பால் குடிக்கவில்லை என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

குழந்தை மார்பக காம்பை மட்டும் சப்பினால் பால் சுரக்காது. மார்பக காம்பை சுற்றி உள்ள பகுதியை பிடித்து குடிக்கும் போதுதான் பால் வரும். சில குழந்தைகள் வாயை நன்கு திறந்து குடிக்க கஷ்டப்படுவார்கள். அந்த சமயத்தில் சுண்டு விரலை அவர்கள் வாயினுள் செலுத்தி வாயை நன்கு திறக்க வைத்த பின் குடிக்க வைக்கலாம்.

பல தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்பது தலையாய பிரச்னையாக உள்ளது. பொதுவாக குழந்தை வாய் வைத்து சப்பி குடிக்கக் குடிக்கத்தான் தாய்ப்பால் சுரக்கும். இப்போது பல தாய்மார்கள் வேலைக்கு செல்வதால், குழந்தை பிறந்த மூன்று மாதத்திலிருந்தே மற்ற பால்களை கொடுத்து பழகி விடுகின்றனர்.

அப்படி செய்யாமல், வேலைக்கு செல்வதற்கு முன், ஒரு கிண்ணத்தில் தாய்ப்பாலை எடுத்து நன்றாக மூடி, ஃபிரிட்ஜில் வைத்து, குழந்தைக்கு பசி எடுக்கும்போது கொடுக்கலாம். தாய்ப் பாலை சேகரிக்க பிரஸ்ட் பம்ப் கருவி எல்லா சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் கிடைக்கிறது. இதை மார்பகத்தில் வைத்து பம்ப் செய்தால், பால் தானாக அதில் உள்ள பாத்திரத்தில் விழும்.

ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இப்படி வைக்கும் தாய்ப்பாலை சூடு செய்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து காய்ச்சக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அடுப்பிலிருந்து இந்த தண்ணீர்ப் பாத்திரத்தை இறக்கி, தாய்ப்பால் இருக்கும் கிண்ணத்தை, இதில் வைத்து சூடாக்க வேண்டும். அதன் பின்னரே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதன் இடையில் மற்ற பால்களை கொடுக்க வேண்டாம்.

ஒரு வயதுக்கு பிறகு மற்ற பால்களை கொடுக்கும் போது அதில் சர்க்கரை சேர்க்காமல் கொடுத்துப் பழகுவது நல்லது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் புத்திகூர்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்’’ என்கிறார் டாக்டர் பத்மினி

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List