Friday, September 11, 2009

மூன்று முட்டை மந்திரம்

சூடான் நாட்டின் ராஜாவிற்கு அழகான மகன் பிறந்தான்.அவன் பெயர் அனந்தா.மகன் பிறந்த கொஞ்ச நாட்களில் ராஜா நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.இளவரசன் அனந்தாவை வளர்க்கும் முழு பொறுப்பும் ராணிக்கு வந்தது. அனந்தா திறமையான வீரனாக வளர்ந்தான்.ராணிக்கு ஒரே ஒரு கவலை தான். அனந்தாவிற்கு நல்ல நண்பர்கள் கிடைக்கவேண்டும். ஏனெனில் ராஜாவிற்கு தீய நண்பர்களின் சகவாசம் கிடைத்து, குடி போதைக்கு அடிமையாகி நோய்வாய்ப்பட்டு இறந்தார். அதனால் மேலும் கவலையுற்றார் ராணி. அனந்தாவை அழைத்து “மூன்று முட்டை மந்திரத்தை” சொன்னார் ராணி. யார் உனக்கு நண்பர்களாக இருக்க விருப்பப்படுகின்றாயோ, அவர்களை அழைத்து மூன்று அவித்த முட்டைகளை விருந்தாக கொடு. அவர்கள் எப்படி உண்கிறார்களோ அதன்படியே அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாம் என்றார் முதலில் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர் பயிற்சிகளை மேற்கொண்டனர்.அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்று முட்டைகளை கொடுத்தான். அவன் ஒரு முட்டையை சாப்பிட்டு, இரண்டு முட்டைகளை அனந்தாவிற்கு கொடுத்தான். அவன் அம்மாவிடம் இந்த நிகழ்ச்சியை சொன்னதற்கு “உன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டு முட்டைகளை கொடுத்துள்ளான்” இவன் நெருங்கிய நட்பு வேண்டாம் என்றார்கள்.

சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளை படிக்கும் போது வியாபாரி மகன் ஒருவனின் நட்பு கிடைத்தது. அவனையும் அழைத்து மூன்று முட்டைகளை கொடுத்தான் அனந்தா. அவன் மூன்று முட்டைகளையும் முழுங்கினான். அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பும் வேண்டாம் என்றார் ராணி.மற்றொரு மந்திரி மகன் முட்டை ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் உன்னை மதிக்கவேயில்லை பார் என்று அவன் நட்பையும் வேண்டாம் என்றாள் ராணி.

ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான் அனந்தா. வேட்டையாடிவிட்டு அரண்மனை திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. அதனால் காட்டிலே இருக்கும் விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகுவெட்டியின் மகன் விநோதன் இவன் வயதை ஒத்தவன். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாட சென்றான்.

விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் அனந்தா. அவனுக்கும் மூன்று முட்டைகளை தட்டில் வைத்தான். விநோதன் எழுந்து மேஜை மீது இருந்த கத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரை ஒன்றரை முட்டை சாப்பிடலாம் என்றான். அனந்தாவிற்கு ஆனந்தம். உடனே விநோதனின் நட்பை தாயிடம் தெரிவித்தான். தாய் மகிழ்ந்தாள். அவன் விறகுவெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னை சமமாக நினைத்ததன் மூலம் உன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கவில்லை. இது தான் நட்பில் முக்கியம்.

இளவரசன் அனந்தா போர் முறைகள், கல்வி, அரசியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றான். பெரியவனானதும் நாட்டின் அரசனாக பொறுப்பேற்றான். விநோதன் நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். கடைசி வரை நல்ல நண்பர்களாக விளங்கினார்கள்.

.

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List