அகில உலக மகளிர் தினம் வந்தாச்சு. நம்ம மகளிர் முன்னேற்றக் கழகத்துக்காரங்களுக்கெல்லாம் சொல்லவே வேண்டாம். என்னமோ இந்தியாவில் அனைத்துப் பெண்களும் கொடுமைப் படுத்தப் படுவதுபோலவும், அதைக் காக்க வந்த ரட்சகர்கள் தாங்கள்தான் என்பதாகவும் ஆரம்பிச்சுப் பேசுவாங்க. தொலைக்காட்சிகளில் நடிகைகள் மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுப்பாங்க. இன்னும் நம்ம ஜனாதிபதியும் சொல்லுவார். அரசியல்வாதிகள் மறக்காமல் மகளிருக்கென இட ஒதுக்கீடுக்காகப் போராடுவோம்னு சொல்லிட்டு அடுத்த பார்லிமெண்டு தேர்தல் வந்து, இடம் பிடிச்சதும், மக்கள் சபையிலே அந்த மசோதாவைக் கொண்டு வருவதையே தள்ளியும் போடுவாங்க. இதிலே நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காட்டுகின்ற ஒற்றுமையை, நாட்டின் முன்னேற்றத்துக்குக் காட்டுவாங்களாங்கறதே சந்தேகம் தான். அவ்வளவு ஒற்றுமை!
சமீபத்தில் கர்நாடகத்தில் ‘ராம் சேனெ’ என்ற அமைப்பு ‘பப்’ கலாசாரத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கியது பெருமளவில் சர்ச்சைக்குள்ளானது. அனைத்து ஊடகங்களும் இதைப் பெரிது படுத்தியதோடு அல்லாமல், கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சிதான் இதற்குக் காரணம் என்றும் சொல்கின்றன. அப்போது மும்பையில் தாக்கரே நடத்தியதற்கு யாரைக் காரணம் சொல்லுவது என்பதைச் செளகரியமாய் மறந்துட்டாங்க. ராம்சேனெ அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” (மதுக்கடையை நிரப்பு என்று பொருள்!) என்று அறைகூவல் விடுத்துப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.
காந்தியால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சி, காந்தி எங்கள் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சி, பெண்களை இழிவுபடுத்தக் கூடாது, பெண்கள் அனைவரும் சமம், அவர்களின் நன்னடத்தையும், ஒழுக்கமும், தியாகமுமே முக்கியம் எனக் கூறிய தலைவரைப் பெற்ற ஒரு கட்சி இன்று இத்தனை தூரம் கீழ்த்தரமான போக்கைக் கடைப்பிடித்துப் பெண்களை இன்னும் இழிவு நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றது. பெண்கள் குடிப்பதையும், போதையில் ஆடுவதையும் காந்தி எப்போது ஆதரித்தார் என்பதை இவர்கள் சொல்லிவிட்டுப் பெண்களைக் கூப்பிடிருக்கலாமே? காந்தி ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார். ஏற்கெனவே ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தைப் போட்டு அவரைக் கேவலப் படுத்தியது போதாது என்று இப்போது பப்களைப் பெண்களால் நிரப்பும் கலாசாரத்தைக் காங்கிரஸ்காரர் ஒருவர் ஆரம்பித்து வைக்கின்றார்.
நம் கலாசாரம் சீரழிந்து, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கமும் சீர்கெட்டு வருகின்றது. இவருக்கு உண்மையிலேயே பெண்கள் மீதும், பெண்களின் உரிமைகள் மீதும் நம்பிக்கை இருந்தால் பெண்களை உயர்நிலைக்குக் கொண்டு வர விரும்பினால், இதைக் கண்டித்திருக்கவேண்டும். அல்லது பெண்கள் ‘பப்’களுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்றாவது சொல்லி இருக்கவேண்டும். அந்த மாநிலத்தில் நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி என்பதாலேயே அதற்கு எதிராக சமுதாயம் எப்படிப் போனால் என்ன? சமூகம் எப்படிச் சீரழிந்தால் என்ன? பெண்கள் குடித்துக் கெட்டலைந்தால் என்ன? அங்கே நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி. ஆகவே இப்படித்தான் பேசவேண்டும் என்று முடிவெடுத்துக் கண்மூடித்தனமாக இவர் பேசுவதை இவர் வீட்டினரே மன்னிக்க மாட்டார்கள். வெளிநாட்டுக் கம்பனிகளும், IT , அவுட் சோர்ஸிங் வேலைகளும் இன்றைக்கு இளம் பெண்களையும், இளைஞர்களையும் பல்வேறுவிதமான தவறான வழியில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
பெண்கள் ‘பப்’ நடனக் கலாசாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் ஒழுக்கம் கெடாதா? மது மயக்கத்தில் தங்களை மறந்து அவர்கள் தவறு செய்ய நேரிடும் அல்லவா? சுதந்திரம் என்ற பெயரில் எல்லை எதுவெனத் தெரியாமல் எல்லை தாண்டுபவர்களையே சமூகம் பாராட்டும்படியாக இன்றைய ஊடகங்களும், அரசும் அவற்றுக்குத் துணை போகின்றன. கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, அல்லது அவற்றை மீறி, தங்கள் இஷ்டத்துக்கு வாழ்வதுதான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை எந்தப் பெண்ணுக்கும் கிட்டவே வேண்டாம். படிப்பினால் பெண்களுக்கு அறிவு வளரும், நிலை உயரும், ஞானம் உண்டாகும் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் அதிகம் படித்து, அதிகம் சம்பாதிப்பதாலேயே இத்தகைய உரிமைகள் தங்களுக்கு ஏற்றது எனத் தவறாய்ப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
Labels: கலாசாரம்
0 comments:
Post a Comment