Thursday, February 5, 2009

வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தையற்கலை

தையல் கலைஞர் செல்வி வாகேஸ்வரி சன்னதிநாதன்

பெண்களின் கற்பனா சக்தியைத் தூண்டக் கூடிய அழகியல் கலைகளில் தையல் கலை முக்கிய இடம் பிடிக்கின்றது. தையல் கலையை இன்று அனேகமான பெண்கள் பழகி செய்து வருகின்றனர். தையல் கலையானது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்றால் அது மிகையாகாது. எந்தவொரு மனிதனுக்கும் உணவு உறைவிடத்தைப் போன்று உடையும் அத்தியாவசியமானதாகும். ஆகவே தையல் ஒரு முக்கியத்துவமான தொழிலாகும். ஏனெனில் ஒவ்வொரு ஆடைகளுமே யாரோ ஒருவரால் தைக்கப்பட்டதேயாகும்.

சிறுவர் ஆடைகள் என்று எடுத்துக் கொண்டால் Party Frock முக்கிய இடம் பெறுகின்றது. சிறுமிகளுக்கு ஏற்ற வகையிலும் வித்தியாசமான வடிவங்களிலும் Party Frock ஐப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இன்று எமது நாட்டில் தையல் வளர்ச்சி பெற்றுள்ளது. புதுப்புது டிசைன்களில் Party Frock ஐ எமது நாட்டு தையல் கலைஞர்கள் மிகவும் நுட்பத்துடன் தமது கலையார்வத்தை பயன்படுத்தி பல வடிவங்களில் மிகவும் நுட்பமாக தைத்து வெளியிடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த வகையில் Party Frock குறித்து அறிந்து கொள்வதற்காக தையல் கலைஞர் செல்வி வாகேஸ்வரி சன்னதிநாதனை வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் எம்மை இன்முகத்தோடு வரவேற்று எமது கேள்விகளுக்கும் செய்முறையாக சலிப்பின்றி விளக்கமளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு,

தங்களுக்கு இந்த துறையில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? அதற்காக தாங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? நான் சிறு வயதில் இருந்தே இந்த தையல் கலையில் ஆர்வத்துடன் இருந்து வந்தேன். அத்துடன் எனது சகோதரியும் இக்கலையில் ஈடுபட்டு வந்தமை எனக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எனது சகோதரியிடம் சில விடயங்களில் பயிற்சி பெற்ற நான் பின்னர் 1998 ஆம் ஆண்டு சிங்கர் நிலையத்தில் எம்ரொய்டரி மற்றும் தையல் வேலைப்பாட்டையும் ஏனைய தையல் வேலைப்பாடான Party Frock திருமதி சாந்தி என்பவரிடமும் பயின்றேன். பின்னர் மேலதிக மணப் பெண் அலங்காரம், மகிந்தி ஆகியவற்றிற்கான பயிற்சிகளை திருமதி மஞ்சுளா பரசுராமனிடமும் கற்றேன். எனது இந்த முயற்சிகளுக்கு எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைத்தமையே எனக்கு பெரும் அனுகூலமாக அமைந்தது. நான் இந்தத் தையல் கலையை முதலில் பொழுது போக்கிற்காகவே கற்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு கற்கும் போது தான் அதன் முக்கியத்துவம் விளங்கியது. இதனால் இதனை மேலும் திறம்பட பயிற்சி பெற்று எனது தொழிலாக மேற்கொள்ள வேண்டும் என்ற ஓர் உத்வேகம் ஏற்பட்டது. அதனால் இதனைத் திறம்படக் கற்றுத் தேர்ச்சி பெற்றேன்.

இந்த தையல் கலையை எனது தொழிலாக கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றேன். ஆரம்பத்தில் நான் எனது குருவாகிய திருமதி சாந்தி என்பவருடன் இணைந்து Party Frock ஐ தைத்து வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பி நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொண்டோம். தற்பொழுது நான் தனியாக எனது வீட்டில் இருந்தபடியே Party Frock உள்ளிட்ட சுடிதார், சாறி பிளவுஸ், நைட்டி என்பவற்றை ஓடர்களுக்காக தைத்துக் கொடுக்கின்றேன். மேலும் தையல் தவிர்ந்த கேக் ஐசிங், றிச் கேக், பெயின்ரிங், சமையல் கலை என்பனவற்றையும் மேற்கொண்டு வருகின்றேன். இவற்றினால் எனக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடியதாகவுள்ளதுடன் எனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபடியே தொழிலைச் செய்யக் கூடியதாகவும் உள்ளது.

தையல் கலை குறித்து தங்களின் கருத்து என்ன? இதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

தையல் கலை என்பது மிகவும் இலகுவானதும் அதிக பயன் உள்ளதும் ஆகும். தையல் கலையைப் பழகிக் கொள்வதன் மூலம் நாம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாக மேற்கொள்பவர்கள் மட்டும்தான் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தையலைப் பழகிக் கொண்டால் தமது தேவைக்கு சாறி பிளவுஸ், சுடிதார், பாவாடை, சட்டை, நைட்டி என தமக்கு தேவையான அனைத்துவிதமான உடைகளையும் தைத்துக் கொள்வதுடன் தமக்கு விரும்பிய டிசைனிலும் விதம் விதமாக தைத்துக் கொள்ள முடியும். அதனால் பெரும் தொகைப் பணம் மிச்சப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று சிறுவர், சிறுமியர் இருப்பின் அவர்கட்கு தேவையான அனைத்து விதமான Party Frock உட்பட பலதரப்பட்ட ஆடைகளைத் தைத்து விரும்பியபடி அணிவித்துக் கொள்ள முடியும். மேலும் இத் தையல் கலையைப் பயன்படுத்தி வீட்டையும் அலங்கரிக்க முடியும். பெண்கள் இக்கலையை வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம். செலவு குறைவானது. ஆனால் வருமானம் அதிகம் பெறக்கூடியது.

கற்பனைத் திறனுக்கு ஏற்ப திறமைகளை அதிகரித்து நுணுக்கமாகவும் அழகாகவும் தைப்பதன் மூலம் பலதரப்பட்ட நன்மைகளை அடையலாம். என்னைப் பொறுத்தமட்டில் தையல் எல்லோருக்குமே முக்கியமாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகும். இதனைத் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் எமது சிறு தேவைகளுக்கெல்லாம் பிறரை நாடாமல் நாமே அதனை நிவர்த்தி செய்ய முடியும். மேலும் நாங்களே எமது உடைகளை தைப்பதால் நவீன வடிவில் விரும்பியவாறு விரும்பும் போது தைத்துக் கொள்ளலாம். இந்த தையல் கலை ஊடாக நான் பலதரப்பட்ட நன்மைகளைப் பெறுகின்றேன். அத்துடன் வீட்டில் இருந்தபடியே அதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

Party Frock தைக்கும் முறை குறித்து கூறுங்கள்?

இந்த Party Frock இற்கு லேஸ்துணி, ஒகண்டி, சீக்குயின்ஸ் சேர்க்கப்பட்ட துணி, சாமோஸ் துணி,

நெற்துணி எனப் பலதரப்பட்ட துணி வகைகளை பயன்படுத்த முடியும். இதனை அலங்கரிப்பதற்கு கலர் கற்கள், முத்து, பீட்ஸ், லேஸ், சீக்குயின்ஸ், சிறிய பூக்கள், இலைகள், றிபன்கள் எனப் பலதரப்பட்ட பொருட்கள் உண்டு.

எனவே இவற்றில் முதலில் எமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டு பற்றனிற்கேற்ப துணிகளை எடுத்துக் கொண்டு வெட்டிக் கொள்வோம். இங்கு தரப்பட்டுள்ள அளவுகள் ஒரு வயதுடைய பிள்ளைக்குரியதாகும். மேல் உடம்பு அளவுகள் (அளவுகள் அங்குலத்தில் உள்ளது)

தோள்: 8 : 2 = 4''

மார்பு 20 : 4 = 5 + 1 (தையல் இடைவெளி) = 6''

தோளிலிருந்து இடுப்புவரை 8'' ஜோக் எனில் 5' முழு நீளம் 16"

இந்த அளவைப் பயன்படுத்தி உங்களுக்கு விரும்பிய வடிவில் மேல் உடம்பை வரைந்து கொள்ளவும். கீழ் உடம்பு

முழு நீளம் 16 : 8 = 11 + 1 (தையல் இடைவெளி) = 12'' மூன்று வகையான துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். பப்ளின் நீளம் 10'' அகலம் 45'' சட்டின் நீளம் 11'' அகலம் 65'', நெற் துணி நீளம் 12'' அகலம் 65'' இவ் அளவுகளில் கீழ் உடம்பை வெட்டிக்கொள்ள வேண்டும். சட்டையின் விளிம்பைத் தைக்கும் போது விளிம்புகளை உருட்டி தங்கூசியையும் வைத்து உருட்டி தைக்க வேண்டும். அப்போது தான் அது விரிந்து அழகாக இருக்கும்.

மேல் துண்டுகளை கை, கழுத்து எனத் தைத்த பின்னர் கீழ் பகுதிக்காக வெட்டப்பட்ட மூன்று துணியையும் தனித்தனியாக சுருக்கி ஒன்றன் மேல் ஒன்று அடுக்கிய பின் மேல் உடம்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இனி எமக்கு தேவையான இடங்களில் சீக்குயின்ஸ் நெற், கல், பூ என்பவற்றை விரும்பிய இடத்தில் வைத்து தைத்து மேலும் மெருகூட்டிக் கொள்ள முடியும்.

இந்த Party Frock ஐ தைக்க தற்பொழுது அதிக பணம் செலவிடப்படுகின்றது. துணிகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அதிக விலை ஏற்பட்டுள்ளதால் அனேகர் கடையில் ரெடிமேட்டாகவே புதிய சட்டைகளை வாங்கிக் கொள்கின்றனர். இருப்பினும் திருமண வைபவங்களுக்கு Flower Girls இற்கு ஒரே மாதிரி வித்தியாசமான வடிவில் சட்டைகளைப் பெற விரும்புபவர்கள் எங்களை நாடுகின்றனர்.

இந்த Party Frock ஐ தைக்க எனக்கு ஒரு நாள் தேவைப்படுகின்றது. இருப்பினும் அதிகம் Orders இதற்கு வராததால் செய்யக்கூடியதாக உள்ளது. ஏனெனில் சாறி பிளவுஸ், சல்வார் போன்றவற்றை விரைவில் தைத்து விடுவேன். இதனாலும் இந்த Party Frock இற்கு அதிக பணம் அறவிடப்படுகின்றது. என்னதான் இருப்பினும் எமது தேவைக்கேற்ப அதனை விரும்பிய டிசைனில் அளவாக பெற்றுக் கொள்ளக்கூடியதால் இதனைத் தைத்துப் பெற்றுக்கொள்ள பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றார். அவர் வழங்கிய தகவல்களுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றோம்.

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List