Wednesday, March 11, 2009

மாண்புமிகு மருத்துவ சமூகம் !

0
உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால் அதை மறுப்பவர்கள் எவருமே இருக்க முடியாது. இனவேறுபாடு எதுவும் இல்லாமல் அல்லது மிகக் குறைவான ஒரு நாட்டில் ஒன்று போல் முக அமைப்பு கொண்ட மக்கள் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டு அவர்களில் ஒரு பகுதியினரை பிறப்பை, தொழிலை வைத்து தாழ்வு படுத்தி,அடிமையாக்கி வைத்திருக்க கண்ணுக்குத் தெரியாத சாதி என்கிற மாயவலையை பிண்ணி அதில் சிக்க வைத்து வாழ்வியல் சதி(ரா) ஆட்டம் ஆடும் நிலை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வழக்கம். அப்படி செய்பவர்களுக்கு முற்பட்ட, முற்போக்கு சமூகம் என்கிற உயர்ந்த பெயரையும். பாதிக்கப்பட்டவர்களை கிழான சமூகம், தீண்டத்தகாதவர்கள் என்றும் சொல்லி வந்திருப்பது 'தெய்வம் பிறந்ததாகக் வாய்கூசாமல்' சொல்லப்படும் 'பாரத திரு' நாட்டில் இன்றும் கூட நடை முறையில் தொடர்வதும், அதை தடுக்க முனையும் மனிதம் போற்றுவோருக்கு சா'தீயம்' பெரும் அறைகூவல் தான்.


சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ?

அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து சிரைத்துக் கொள்வது வழக்கம். பூணூல் போட்டுக் கொள்வது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே வந்திருக்க வேண்டும் என்று வரலாற்று, இலக்கிய ஆர்வளர்கள் சொல்லுகிறார்கள். பூணூல் பற்றி எதுவும் குறிப்பிடாத வள்ளுவரும், மழித்தலும் நீட்டலும் வேண்டாம்' என்று அறிவுறித்தியது பார்பனர்களின் வெளிப்பகட்டைக் கண்டிப்பதற்குத்தான் என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களினால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும் கட்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மருத்துவம் பார்க்கும் வழக்கம் இருந்தது, பெரும்பாலும் சமணர்களே மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவே இருந்தனர். பெளத்த, சமணர், பார்பனர் தவிர்த்து மழித்துக் கொள்ளும் பழக்கம் வேறொருவருக்கு இருந்ததில்லை. சமணர்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்ட காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட சமணர்கள் அனைவரும் மருத்துவத் தொழிலுடன் சவரம் செய்வதையும் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அது அப்படியே ஆண்டு 1900 வரை தொடர்ந்தது.

காயங்கள் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்ய அந்த இடங்களில் மயிரையும் மழிப்பது வழக்கம் என்பதால் அன்றைய மருத்துவர்கள் அனைவருமே சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பார்பனர் மற்றும் சைவ வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தால் பக்தி இயக்கம் என்ற பெயரில் சமணர்கள் வீழ்த்தப்படுவதற்கு முன்பு பார்பனர்கள் தங்களுக்கு தாங்களே சிரைத்துக் கொள்வது தான் வழக்கம். வீழ்த்தப்பட்ட சமண சமூகத்தில் மருத்துவம் தெரிந்தவர்களை மருத்துவர்கள் என்கிற சாதிப் பிரிவாக ஆக்கி, மருத்துவம் தெரியாதவர்களை வண்ணார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகமாக மாற்றி ஊருக்கு ஒதுக்குப் புறம் குடி இருக்க அனுமதிக்கப்பட்டதாகத்தான பண்டைய சாதியம் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவெங்கும், புத்த சமண மத வீழ்ச்சி என்பது ஆதிசங்கரருக்கு பிறகு ஏற்பட்டவையே, அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக தொடர்ந்ததும் ஆதிசங்கரருக்கு பிறகு நடந்த வரலாற்று நிகழ்வே.

இப்படியாக உருவான மருத்துவ சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு சேவகம் செய்ய வேண்டி இருந்ததால், தீண்டாமை ஆதிக்கத்தின் பாதிப்புக்கு அவர்களும் ஆளானார்கள்.

மருத்துவர்களின் சமூகக் கடமைகளாக அவர்களுக்கு முற்பட்ட சமூகம் 'விதிக்கப்பட்டவை' எவை என்று பார்த்தால்,

* தேவையான போது தலை, முகச் சவரம் செய்துவிடுவது
* இல்லச் சடங்கின் போது ஹோமம் செய்ய வரும் பார்பனருக்கு உதவுதல்
* பூப்பு எய்தும் சடங்கு, சாவு ஆகியவற்றை பிறர்க்கு சொல்லிவிடுதல், பூப்பு எய்திய பெண்ணுக்கு மூலிகை சார் கலந்த குளிக்கும் நீரை ஆயத்தம் செய்து தருவது
* "மாப்பிள்ளை சவரம்" - திருமணத்தின் முதல் நாளின் போது மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்குதல், அப்போது அவனுக்கு எதேனும் ஆண்மை தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லுதல்
* மணப்பெண்ணுக்கு சேலைக் கட்டிவிடுவது (மனுதர்மப்படி பால், பட்டுப் புடைவைக்கும் தீட்டு கிடையாதே !)
* ஆண் / பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல்
* பெண்களுக்கு மகப்பேறுக்கு உதவுதல்
* சவத்துக்கு சவரம், சவத்தை குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல், சவ அடக்கத்தில் உதவுதல்

இவைகளுக்கு "ஊர்ச் சோறும்", கூலியாக நெல் போன்ற தானியங்கள் வழங்கப்பட்டதாகவும், அவை இல்லாதவர்கள் பணம் கொடுப்பதும் வழக்கமாம். இந்த தொழிலில் ஈடுபடும் அந்த சமூகத்து ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் சொல்லப்பட்டனர். அவர்களில் பெண்கள் மருத்துவம் மிகுதியாக தெரிந்து வைத்திருந்ததால் 'பாட்டி வைத்தியம்' என்கிற சொல் கூட பெண்கள் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் ஏற்பட்ட சொல் என்றே சொல்கிறார்கள்.

ஆங்கிலேயே மெக்கல்லே கல்வித் திட்டத்தினால் அலோபதி மருத்துவம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குலத்தொழில் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும் பிறவற்றை செய்வது இறை விதிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவரும் பார்பனர்கள் மருத்துவத் தொழிலில் கிடைக்கும் பணம் புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது ஏனைய பிற சமூகமும் ஆங்கில மருத்துவத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள். 12 நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்க சட்டதிட்டம் காரணமாக மருத்துவத் தொழிலை தொடர முடியாமல் தங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலான சவரத்தொழிலை வேறு வழியின்றி தொடர்கின்றனர். அந்தத் தொழிலையும் கூட நகரச் சூழலில், அதற்கு ஒரு உ(ய)ரிய விலையை நிர்ணயம் செய்து 'ப்யூட்டி பார்லர்' என்ற பெயரில் முற்பட்ட சமூகம் வைத்து செய்து கொண்டு வருகின்றன.

நாம் நம் உடலைத் தொட அனுமதிப்பது மருத்துவர்களுக்கும், சவரத்தொழிலாளிக்கும் மட்டுமே. அந்த இருவேலையையும் ஒருவராக செய்துவந்த, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட மருத்துவர் சமூகம் முடித்திருத்ததை மட்டுமே செய்துவருகிறது. அதிலும் கிராமங்களில் தலித் பிரிவினருக்கு சவரம் செய்பவர்கள் மேல்சாதிக்காரர்களுக்கு சவரம் செய்ய தடுக்கப்பட்டு இருக்கிறது
 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List